சென்னை: நாளை முதல் தமிழக பாஜக பலமானது என்பதை உணரும் வகையில் எங்கள் செயல்பாடு இருக்கும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை, தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தொண்டர்களுடன் சேர்ந்து தமிழிசையும் மேளம் அடித்தும், களரி விளையாடியும் தனது உற்சாகத்தை வெளிப்படுத்தி பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திற்கான பாஜக மேலிடப் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார் என கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், என்னதான் தாக்கி பேசினாலும் பாஜகவின் தாக்கம் தமிழகத்தில் இருக்கும். வருங்காலத்தில் நாங்கள்தான் தமிழகத்தை வழிநடத்துவோம்.
பாஜக தலைமையிலான மத்திய அரசு, மக்களுக்கு நிறைய நல்லது செய்திருக்கிறது. தேசிய பொதுக் குழுவிலும் இதை எங்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள். அதையேதான் பிரதமர் மோடி, காணொலிக் காட்சி மூலம் தமிழக உறுப்பினர்கள் மத்தியில் பேசும்போதும் வலியுறுத்தியிருக்கிறார். மேலும், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு எந்த அனுமதியும் தரவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் போது, மேலும் பல நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். தமிழகத்திற்கு 5 லட்சம் கோடி அளவிலான நலத்திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். கோடநாடு வீடியோ விவகாரத்தில் சட்டப்படி விசாரணை நடப்பது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

Leave a Reply

  • (not be published)