வாஷிங்டன்: அமெரிக்காவில், தமிழர் உள்பட 4 இந்தியர்களை முக்கிய பதவிகளில் நியமித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு 36 முக்கிய பதவிகளில் இந்தியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில், அமைச்சர் அந்தஸ்திலான பொறுப்பு வகித்த இந்தியரான நிக்கி ஹாலே, பத்திரிகைத் துறை துணை செயலாளராக பதவி வகித்த ராஜ் ஷா ஆகியோர் டிரம்ப் நிர்வாகத்திலிருந்து வெளியேறினர். இந்த நிலையில், அணுசக்தி துறை உள்ளிட்ட 3 முக்கிய பதவிகளுக்கு இந்திய வம்சாவளியினரை நியமனம் செய்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘அணுசக்தி துறையின் உதவி செயலாளர் பதவிக்கு ரீட்டா பேரன்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தொழில்நுட்ப மேம்பாட்டுத்துறை அலுவலக இயக்குனராக பதவி வகித்தவர். இது தவிர, கருவூலத் துறை உதவித் துணை செயலாளராக பதவி வகித்து வரும் பீமல் படேலை கருவூலத் துறையின் உதவி செயலாளராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். தனித்துவ மற்றும் சிவில் உரிமைகள் கண்காணிப்பு வாரியத்துக்கு ஆதித்யபம்சாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் சட்டக் கவுன்சில் ஆலோசகராக பணியாற்றியவர்’ என கூறப்பட்டுள்ளது. இவர்களின் நியமன உத்தரவு அமெரிக்க செனட் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. செனட் சபை அனுமதி அளிக்கும் பட்சத்தில் 3 பேரும் அமெரிக்காவின் முக்கிய துறைகளில் பணியாற்றுவார்கள். ராஜாகிருஷ்ணமூர்த்திக்கு உயர்பதவி அமெரிக்காவின் அதிகாரமிக்க நுண்ணறிவு பாதுகாப்பு பிரிவுக்கான நிரந்தர தேர்வுக் குழு உறுப்பினர்களில் ஒருவராக இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரும், ஜனநாயக கட்சியை சேர்ந்தவருமான ராஜா கிருஷ்ணமூர்த்தியை டிரம்ப் நியமித்துள்ளார். இந்த பதவி மிகவும் அதிகாரம் மிக்கது. இதன் மூலம், இக்குழுவில் இடம் பெறும் முதல் தெற்காசியர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். இது தவிர, இந்த குழுவில் மேலும் 3 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் வசித்த தமிழ் குடும்பத்தை சேர்ந்தவரான ராஜா கிருஷ்ணமூர்த்தி, 3 மாத குழந்தையாக இருந்த போது அவரது குடும்பம் அமெரிக்காவில் குடியேறியது.

Please follow and like us:

Leave a Reply

  • (not be published)