மெல்போர்ன்: இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இதில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில், ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை வென்று சாதனை படைக்கலாம். விறுவிறுப்பான இப்போட்டி மெல்போர்னில் காலை 7.50 மணிக்கு தொடங்குகிறது.ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அடுத்து நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம், ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து, ஒருநாள் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் முதல் 2 போட்டிகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளன.கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மெல்போர்ன் எம்சிஜி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. கடந்த போட்டியில் டோனி அட்டகாச அரைசதம் அடித்து, 299 ரன் இலக்கை சேஸ் செய்ய பெரிதும் உதவியது அணிக்கு புதுத்தெம்பை தந்துள்ளது. கடந்த 2018ல் ஒருநாள் போட்டியில் ஒரு அரைசதம் கூட அடிக்காத டோனி, 2019 தொடங்கியதும் அடுத்தடுத்த 2 போட்டியில் அரைசதம் அடித்து ஜொலித்துள்ளார். இதோடு, ரோகித் ஷர்மா, தவான், கேப்டன் கோஹ்லியும் பட்டையை கிளப்புவதால் இந்திய அணியின் பேட்டிங் வலுவாகவே உள்ளது.
நமது பந்துவீச்சுதான் சற்று தடுமாறுகிறது. வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஸ்வர், முகமது ஷமி தங்கள் பணியை கச்சிதமாக செய்கின்றனர். குல்தீப், ஜடேஜா சுழல் கூட்டணி மிடில் ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்துகிறது. ஆனால், 5வது பந்துவீச்சாளர் இடம்தான் பிரச்னைக்குரியதாக இருக்கிறது. முதல் போட்டியில் காலீல் அகமது 10 ஓவர் வீசி விக்கெட் எடுக்காமல் 55 ரன் கொடுத்தார். 2வது போட்டியில் சிராஜ் 10 ஓவர் வீசி விக்கெட் எடுக்காமல் 76 ரன்களை கொடுத்தார்.
இவர்கள் இருவருமே கைகொடுக்காததால், இன்றைய போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் சேர்க்கப்பட அதிக வாய்ப்பிருக்கிறது. மெல்போர்ன் மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், ஆல்ரவுண்டரான தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் அறிமுக வீரராக களமிறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. விஜய் சங்கர் அணியில் இடம்பிடிக்கும் பட்சத்தில் அம்பாதி ராயுடு நீக்கப்படலாம். 6 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குவதும் இந்திய அணிக்கு கூடுதல் பலமளிக்கும். ஆஸ்திரேலிய அணியில் முதுகு வலி காரணமாக வேகப்பந்து வீச்சாளர் பெஹரன்டார்ப்புக்கு பதிலாக ஸ்டான்லேக்கும், முதல் 2 போட்டியில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாத சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனுக்கு பதிலாக ஆடம் ஸாம்பாவும் இடம் பெற்றுள்ளனர். ஆஸி அணியில் ஷான் மார்ஷ், ஹேண்ட்ஸ்கோம்ப் இருவரும் பேட்டிங்கை தாங்கிப் பிடிக்கின்றனர். மேக்ஸ்வெல்லும் சிறப்பான பார்மில் உள்ளார். இவர்களுடன் கேப்டன் பிஞ்ச், கவாஜா ஆகியோரும் அதிரடியை காட்டினால், இந்திய அணிக்கு சிக்கலாகி விடும். இவர்களை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். பந்துவீச்சில், ரிச்சர்ட்சன், ஸ்டாய்னிஸிடம் கவனமாக இருக்க வேண்டும்.ஏற்கனவே டெஸ்ட் தொடரில் நமது அணி சாதனை படைத்திருப்பதால், இன்றைய போட்டியிலும் வென்று, ஒருநாள் தொடரையும் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இன்றைய போட்டியில் வெல்லும் பட்சத்தில், ஆஸி. மண்ணில் முதல் முறையாக இந்தியா ஒருநாள் தொடரை வென்று சாதனை படைக்கலாம். இது, ஆஸ்திரேலியாவில் இந்திய அணி விளையாடும் 2வது ஒருநாள் தொடராகும். இதற்கு முன், 2016ல் நடந்த 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-4 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.
இதற்கு பழிதீர்த்து, கோஹ்லி அன்ட் கோ இன்று சாதிக்குமா… பொறுத்திருந்து பார்ப்போம். அணிகள் விபரம்இந்தியா: விராட் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா, ஷிகார் தவான், டோனி, தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், அம்பாதி ராயுடு, கேதார் ஜாதவ், சாஹல், காலீல் அகமது, முகமது ஷமி, முகமது சிராஜ், சுப்மன் கில்.ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச், கேரி, கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல், ரிச்சர்ட்சன், சிடில், ஸாம்பா, ஸ்டான்லேக்.
* கடைசியாக விளையாடிய 10 ஒருநாள் போட்டியில் 2ல் மட்டுமே ஆஸ்திரேலியா வென்றுள்ளது. இங்கிலாந்தில் நடந்த 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 5-0 என ஒயிட் வாஷ் தோல்வியையும், சொந்த மண்ணில் தென் ஆப்ரிக்காவிடம் 1-2 என்ற கணக்கில் தோல்வியையும் ஆஸ்திரேலியா சந்தித்துள்ளது.
* கடைசியாக நடந்த 5 ஒருநாள் தொடர்களை ஆஸ்திரேலியா இழந்துள்ளது. தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து (2 முறை), இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக தோற்றுள்ளது. கடைசியாக, 2017ல் சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை ஆஸ்திரேலியா வென்றுள்ளது.
* மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய 14 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி 9ல் தோல்வி அடைந்துள்ளது. இங்கு, கடைசி 3 போட்டிகளிலும் இந்திய அணி தோற்றுள்ளது. கடைசியாக நமது அணி 2008ல், 160 ரன் இலக்கை சேஸ் செய்து வென்றுள்ளது.

Please follow and like us:

Leave a Reply

  • (not be published)